Wednesday, November 14, 2007

துப்பாக்கிதாரிகளாக மாறியுள்ள அரசியல்வாதிகள்

மேனகா மூக்காண்டி
நாட்டின் அரசியல்வாதிகள்; பலர் துப்பாக்கிதாரிகளாக மாறி தமது கருத்துக்கெதிராக செயற்படுபவர்களை நோக்கி துப்பாக் கியையை நீட்டிக்கொண்டிருக்கி றார்கள்.இதுபற்றி கடந்த சில தினங்களாகவே ஊடகங்களில் தொடர்ந்தும் செய்திகள் வெளிவந்தவண்ணமிருந்தன.

எமது நாட்டின் மிகவும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களான மர்வின் சில்வா, மஹிந்தானந்தா அலுத்கமகே மற்றும் கே.ஏ.பாயிஸ் ஆகியோரே இந்த சலசலப்புக்குள்ளானவர்கள். இவ்வமைச்சர்களின் சுய பாதுகாப்பு கருதி அரசாங்கத் தால் வழங்கப்பட்ட கைத்துப் பாக்கிகளை தமது தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு சட்ட விரோதமான முறையில் இவர்கள் உபயோகிக்க முயன்றுள்ளனர்.

எனவே இந்த துப்பாக்கி விடயம் பற்றி சில அரசியல்வாதிகளிடம் கேட்டோம்.

ஐக்கிய தேசிய கட்சியின்
பாராளுமன்ற உறுப்பினர்
ஜோன் அமரதுங்க :-
“1971 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி யினரால் கலவரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக அமர்த் தப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் நிலவியது. இவர்களின் பாதுக்காப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கத்தால் வழங்க முடியாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆகவே அவர்கள் தமது சுயபாதுகாப்பை மேற்கொள்வதற்காக அப்போதைய அரசாங்கத்தால் கைத்துப்பாக்கிகளும் அதற்கான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டன.

மேற்படி கலவரங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கைத்துப்பாக்கிகளைப் பாவிக்க முடியும் என்ற சட்டமூலம் மட்டும் தொடர்ந்தும் இன்றுவரை அமுலிலேயே உள்ளது.
இந்த கைத்துப்பாக்கியினை இவர்கள் அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அல்லது வெளிநாடுகளிடமிருந்து கொள்வனவு செய்ய முடியும். ஆனால் இத்துப்பாக்கிப் பாவனையானது தமது உயிருக்கு அல்லது சொத்து க்களுக்கு ஏதாவது அபாயம் ஏற்படும் சந்தர்ப்பத்திலேயே உபயோகிக்க முடியும். இது தவிர்ந்து ஒருவரை பயமுறு த்துவதற்காகவோ அல்லது அதன் மூலம் தமக்கான இலாபங்களை உழைத்துக் கொள்வதற்காகவும் அதனை உபயோகிக்க முடியாது” என்று அவர் தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிகளானவை அமைச்சரோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரோ கேட்கும் பட்சத்திலேயே வழங்கப்படுகின்றன. அது தவிர்ந்து இவற்றை அரசாங்கம் அவர்களுக்கு கட்டாயப்படுத்தி வழங்குவதில்லை.

எமது நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நாட்டின் பொறுப்புமிக்க மதத் தலைவர்களான பிக்குமார்களும் அங்கம் வகிக்கின்றனர். “அஹிம்சையைக் கடைபிடிப்போம். ஆயுதங்களைக் கையாள்வதிலிருந்து விலகுவோம் என்று கூறும் கௌதம புத்தரின் வாக்குப் பிரகாரம் செயற்படும் பிக்குகளும் இந்த சுயபாது காப்புக்கான கைத்துப்பாக்கி களைப் பயன்படுத்துகின்றனரா என அறியமுற்பட்டோம்

ஹெல உறுமயவின்
பாராளுமன்ற உறுப்பினர்
அத்துரலியே ரத்தின தேரர் :-

“ ஒருவரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்ற பட்சத்தில் இந்த துப்பாக்கி களைப் பயன்படுத்தலாம். ஆனால் பிக்குமார்களாகிய நாம் அவ்வாறு பயன்படுத்துவதில்லை. இந்த துப்பாக்கிகளை சட்ட அனுமதியுடனேயே உபயோகிக்க முடியும். அதனையும் மீறி உபயோகிப்ப வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடி யும் என்று தேரர் தெரிவித்தார்.

தமது சுய பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி களைப் பொது இடங்களில் பாவித்து சர்ச்சைக்குள்ளான பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ன சொல்கிறார்?

கால்நடைவளப் பிரதி அமைச்சர்
கே.ஏ.பாயிஸ்:-
“நான் புத்தளத்தில் துப்பாக்கி யைப் காட்டியது சிறு விடயம். ஆனால் எமது நாட்டின் ஊடகங்கள் அதனை பாரிய பிரச்சினையாக்கி விட்டன. உண்மையில் அன்று என்ன நடந்தது என்றால், பாராளுமன்ற உறுப்பினரான றிஷாட்டுக்கும் எனக்கும் இடையே வாக்கு வாதமொன்று இடம்பெற்றது. அவர் புத்தளத்தில் நிலவும் அரசியல் நடவடிக்கைகளைக் குழப்பும்; வகையிலான செயற் பாடுகளில் ஈடுபட்டார். அவ்வா றான செயல்கள் தவறு என்று கூறச் சென்ற அனைவரையும் பார்த்து தராதரமின்றி பேச ஆரம்பித்தார். அவரது அப்பேச்சு க்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது எழுந்த பிரச்சனையின் போதுதான் என்னிடமும் துப்பாக்கி இருக் கிறது என்று எடுத்துக் காட்டினேன்.நான் துப்பாக்கியைக் காட்டிய விடயத்தைப் பெரிது படுத்திய றிஷாட் துப்பாக்கியைக் காட்டி கடைகளையெல்லாம் மூடச்செய்ததாக ஊடகங்கள் வாயிலாக செய்திகளைப் பரப்பி விட்டார். உண்மையில் நான் எவரையும் துப்பாக்கி காட்டி மிரட்டவில்லை. குறைந்த பட்சம் பாராளுமன்ற உறுப்பினரான றிஷாட்டிடம் கூட துப்பாக்கியைக் காட்டி மிரட்டவில்லை. அவ்வாறு நான் மிரட்டினேன் என்று நிரூபித்தால் எனது அமைச்சுப் பதவியைக் கூட விட்டுச் செல்ல தயாராகவுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

இவர் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனாலும் பொறுப்பு வாய்ந்த அமைச்சராகவுள்ள ஒருவர் அத்துப்பாக்கி கொடுக்கப்பட்ட காரணத்தையும் மீறி பொது இடத்தில் அதை வெளிப்படுத்தி அதனூடாக தனது பலத்தை நிரூபிக்க முயன்றது தவறே. இந்த இடத்தில் மர்வின் சில்வா மிக வெளிப்படையாகவே துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார். எனவே இந்த துப்பாக்கிகள் சுய பாதுகாப்புக்க வழங்கப்பட்டுள்ளன என்பதன் அர்த்தம் மாறி சுய அரசியல் அதிகாரத்தை தக்க வைக்கும் அல்லது தமது இருப்பை நிலை நிறுத்த பயன்படுத்தியுள்ளனர்.

No comments: