Wednesday, November 14, 2007

வரவு செலவுத் திட்டம் யுத்தத்திற்காகவா? மக்களுக்காகவா?

மேனகா மூக்காண்டி
புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு இன்னும் 5நாட்களே உள்ளன. எதிர்வரும் 7ஆம் திகதி நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2008 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்;பிக்கப்படவுள்ளது. இது மஹிந்த சிந்தனையின் கீழ் சமர்ப்பிக்கப்படும் மூன்றாவது வரவு செலவுத் திட்டமாகும்.
வரவு செலவுத் திட்டத்தோடிணைந்து அரசியலிலும் பிரச்சினைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. பொருட்களின் விலையேற்றத்தால் பாரிய வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்குள்; சிக்குண்டுள்ள மக்களின் எதிர்பார்ப்பு புதிய வரவு செலவுத் திட்டம் இதற்கெல்லாம் சுமுகமான தீர்வொன்றைப் பெற்றுத்தரும் என்பதே ஆகும்.இந்த வரவு செலவுத் திட்டம் மக்கள் மத்தியில் மட்டுமன்றி அரசியல்வாதிகள் பொருளாதார நிபுணர்கள் மத்தியிலம் பலத்த எதிர்பார்ப்பினைத் தோற்றுவித்துள்ளது.அந்த வகையில் வரவு செலவுத் திட்டம் குறித்து சிலர் வீச்சுக்காகத் தெரிவித்தவை இவை.
ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க
எமது அரசாங்கம் சகல நடவடிக்கைகளிலும் போரை முன்னிலைப்படுத்துகிறது. அந்த முன்னுரிமை இம்முறை வரவு செலவுத் திட்டத்துக்கும் வழங்கப்பட்டிருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன். ஆனால் இன்றைய சூழ்நிலையில் எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பொருட்களின் விலையேற்றமே. இது பற்றி உரிய அமைச்சர்களிடம் கேட்டால் உலக சந்தையில் நிலவும் பொருட்களின் விலையேற்றமே இதற்குக் காரணம் என்கிறார்கள். உண்மையில் உலக சந்தையின் பொருள்; விலையேற்றம் எமது நாட்டில் மட்டுமா பாதிப்பை ஏற்படுத்துகிறது. உலகின் வேறு நாடுகளுக்கு அந்த பாதிப்பு இருப்பதாக தெரியவில்லையே.
பாராளுமன்ற உறுப்பினர்ஸ்ரீபதி சூரியாராச்சி;மஹிந்த சிந்தனையில் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் ஒழுங்காகக் கடைபிடிக்காமையே இங்குள்ள பிரச்சினை. வாழ்க்கைச் செலவு குறித்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைத்துக்கும் இம்முறை முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் மூலம் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இம்முறை வரவு செலவுத் திட்டமானது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வளிப்பதாக இருக்க வேண்டும்.
கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் கணேசமூர்த்தி:-வரவு செலவு திட்ட இடைவெளியை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள கூடியதான வரவு செலவு திட்டமே சிறந்தது. அரசின் நடைமுறை செலவுகளை குறைத்து மூலதன செலவுகளை அதிகரிக்க வேண்டும். அமைச்சுக்களுக்கான செலவுகளை குறைத்து துண்டுவிழும் தொகையை குறைத்து நாட்டில் பணவீக்கம் ஏற்படாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த வருட வரவு செலவு திட்டத்தில் வர்த்தக சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டனர். இம்முறை அவ்வாறான புறக்கணிப்புக்கள் இன்றியும் கைத்தொழில் துறை மற்றும் சேவைத்துறையை கவனத்திற் கொண்டதாகவும் வரவு செலவுத் திட்டம் அமைய வேண்டும்.
வர்த்தகர் சுப்பிரமணியம்கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் இறக்குமதி பொருட்களுக்கான வரி பெருமளவில் அதிகரிக்கப்பட்டது. இதனால் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டோம். அது மாத்திரமன்றி வர்த்தக சமூகத்தை ஊக்குவிக்கக் கூடிய எந்தவொரு முன்மொழிவுகளும் இடம்பெறவில்லை. நகர்ப்புறத்தை மையமாக கொண்ட வரவு செலவு திட்டம் முன்வைக்கப்படவில்லை. கிராமங்களை மையமாக கொண்ட வரவு செலவு திட்டமே முன்வைக்கப்பட்டது. அதனால் இம்முறை இப்பிழைகள் தவிர்க்கப்படும் என நம்புகின்றேன்.
குடும்ப தலைவி எஸ்.இதயமலர்நாட்டில் ஊழல் மோசடி அதிகரித்துள்ளது இது குறைந்தால் பொருட்களின் விலைகள் குறையும். பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் தற்போது இப்பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது என்றார்.
இந்த எதிர்பார்ப்புக்கள் இவ்வாறிருக்க, இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் போது வாழ்க்;கைச் செலவைக் குறைத்தல், பிரதேச மற்றும் தேசிய அளவிலான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான விடயங்கள் போன்றன உள்ளடக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலைமையில் மக்கள் அதிகரித்து வரும் பொருட்களின் விலையேற்றத்தால் பாரிய பிரச்சினைக்குள் சிக்குண்டுள்ளனர். அதனால் அரசின் புதிய வரவு செலவுத்திட்ட அறிக்கை எதிர்நோக்கும் பிரதான சவால் மக்களின் வாழ்க்கைச் செலவைக்குறைப்பதாகும். இதேபோன்று அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதுடன் இதற்கு சமனாக இலங்கை ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் நாம் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதுடன் அதற்காக நாம் செலுத்தும் பணமும் அதிகரிக்கப்படுகிறது. இதனை ஈடுசெய்ய அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் கடனும் அதிகரிக்கப்படுவதுடன் அதற்காக செலுத்தும் வட்டியும் குட்டி போடுகிறது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக எல்.ரி.ரி.ஈ இயக்கத்தினால் தேசிய பாதுகாப்புக்கு விடப்படும் சவாலை எதிர்கொள்ளவும் அரசினால் பாரியளவு பணம் செலவிடப்படுகிறது.இவ்வாறான விடயங்களைக் கருத்திற் கொள்ளும் போது தற்போது அரசாங்கம் பொருளாதாரம் மற்றும் வர்த்தக சூழ்நிலைகளுக்கு ஏற்ற சர்வதேச சவாலை எதிர்கொண்டு தீர்வு காணும் காலகட்டத்துக்கு வந்துள்ளது.
இந்த அனைத்து சுமைகளையும் மக்கள் மீது சுமத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்;.2008ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வு கிடைக்கும் என நம்பியிருக்கும்; மக்களை ஏமாற்றாத வகையில் அரசு செயற்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

No comments: